×

சித்தூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் மகசூல் இல்லாததால் மாங்காய் விளைச்சல் குறைவு

*மரங்களை வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பும் அவலம்

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மா மரங்களில் மகசூல் இல்லை. இதனால் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. மரங்களை வெட்டி செங்கல் சூளைக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 87 ஆயிரம் ஹெக்டரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்து வருகிறார்கள். சித்தூர் மாவட்டத்தில் சித்தூர் மண்டலம் தாவனம் பள்ளி மண்டலம், தாமல்செருவு, பங்காரு பாளையம், யாதமரி, என் ஆர் பேட்டை, கங்காதர நெல்லூர், ஐராலா, அரகொண்டா உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட மண்டலங்களில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்து வருகிறார்கள். சித்தூர் மாவட்டத்தில் இருந்து மாங்காய் சீசனில் நாள்தோறும் 1000 மேற்பட்ட டன் மாங்காய்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக தாமல்செருவு, பங்காரு பாளையம், சித்தூர் உள்ளிட்ட மண்டலங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மாங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சித்தூர் மாவட்டத்தில் இருந்து மகாராஷ்டிரா குஜராத், ராஜஸ்தான், டில்லி, மேற்குவங்கம், மத்திய பிரதேஷ், உத்தரப் பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவு மாங்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதேபோல் வெளிநாடுகளுக்கும், கன்டெய்னர் லாரிகள் மூலம் சென்னை துறைமுகத்திற்கும், விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கும், நெல்லூர் துறைமுகத்திற்கும், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு மாங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே போல் சித்தூர் மாவட்டத்தில் அதிக விளைச்சல் தோத்தா பூரி மாங்காய் இந்த வகை மாங்காய்கள் ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சித்தூர் மாவட்டத்தில் 147 ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் மூலம் ஜூஸ் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலால் தோத்தாபுரி மாங்காய் மட்டும் அல்லாமல் மல்கோபா, செந்தூரா, சக்கரை குட்டி, காலா பாடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த மாங்காய்கள் விளைச்சல் போதி அளவு இல்லை. இதனால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

அதேபோல் ஜூஸ் வகை தயாரிக்கும் தொழிற்சாலைகளும், மாங்காய் விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து, அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தோத்தா பூரி மாங்காய் வகைகளை இறக்குமதி செய்து ஜூஸ் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
வருடத்திற்கு ஒருமுறை விளையும் மாங்காய் விளைச்சல் இந்த ஆண்டு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு அதிக விளைச்சல் தந்த மாங்காய் விளைச்சல் இந்த ஆண்டு விவசாயிகளை ஏமாற்றத்திற்குள் உள்ளது. வருடம் தோறும் மா செடிகளுக்கு நீர் பாய்ச்சி உரம் இட்டு பூச்சிக்கொல்லி மருந்து அடித்து பாதுகாத்து வந்தோம். ஆனால் இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு ₹2 லட்சம் முதல் ₹3 லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் ஆகிய நாங்கள் செலவு செய்துள்ளோம். ஆனால் இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு ₹25 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை மட்டுமே மாங்காய் மகசூல் உள்ளது.

இதனால் ஒவ்வொரு விவசாயியும் ஒரு ஏக்கருக்கு ₹3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்கள். ₹2.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான விவசாயிகள் மாங்காய் மரங்களை வெட்டி செங்கல் சூளைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அதிக விளைச்சல் இருந்த போதும் ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர்கள் சிண்டிகேட் ஆனதால் கிலோ ₹5 முதல் ₹8 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஏராளமான மாங்காய் விவசாயிகள் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகினார்கள்.

ஆனால் இந்த ஆண்டு அதிக விளைச்சல் வரும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் மகசூல் இல்லாததால் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே மாங்காய் விவசாயிகளுக்கு மாநில அரசு இந்த ஆண்டு ஏக்கருக்கு ₹50 ஆயிரம் முதல் ₹1 லட்சம் வரை நிதி உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

The post சித்தூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் மகசூல் இல்லாததால் மாங்காய் விளைச்சல் குறைவு appeared first on Dinakaran.

Tags : Chittoor district ,Avalam Chittoor ,Chittoor ,Dinakaran ,
× RELATED ஆந்திரா மாநிலம் சித்தூர்...